மிளிர்கல் : கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை தகர்போம்…

புனிதப் படுத்தபட்டுவிட்ட எல்லாவற்றையும் தகர்த்து உண்மை, அவலங்களை அம்பலப்படுத்துவது தான் இன்றைய தேவை.

22549540_1625440687512097_5799839639312499323_n
“மிளிர்கல்” ஒரு முறை இரவி கார்த்திகேயன் தோழர் சங்க இலக்கியங்கள் குறித்த விவாதத்தில் சொல்ல கேள்விபட்டேன். அன்று அதன் மீது ஆர்வம் இல்லாதிருக்கவே மறந்துபோனது. சில நாட்களுக்கு பிறகு நண்பரின் பழைய புத்தகங்களை பார்த்துகொண்டிருக்கும் போது கிடைத்தது.

கருப்பு அட்டை. இரண்டு முகங்கள். அவ்வளவுதான். எளிதில் பிடிபடவில்லை, எதை பற்றிய நாவல் என்று.

காங்கேயம் காளைகளுக்கு மட்டும்தான் பிரபலம் என்று நினைத்திருந்த எனக்கு நாவலின் தொடக்கத்திலேயே கூறியது அது செமி பிரசியஸ் ஸ்டோன்களுக்கும் பெயர் போன இடம் என்று. அடுத்தடுத்து அறிமுகமாகும் கதாப்பாத்திரங்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், சமூகம் பற்றிய பார்வை வாசிப்பை இன்னும் தூண்டியது. முடித்த வேகத்திலேயே மீண்டும் ஒருமுறை படித்தாலும் சலிக்காத அளவுக்கு தகவல்கள்.

தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீகுமார், தன்னை பொதுவுடமை இயக்கத்துடன் இணைத்துகொண்ட நவீன் எனும் இளைஞன், குழந்தை முதலே சிலப்பதிகார கதைகள் கேட்டு கோவலன் கண்ணகி பயணித்த வழியில் சென்று அதை ஆவணப்படமாக்க நினைத்து டெல்லியில் இருந்து தமிழகம் வரும் முல்லை இவர்கள் மூவருக்கும் இடையே நிகழும் உரையாடல்கள். அதனூடாக தெரியவரும் பண்டைய தமிழர்களின் வாழ்வும், அன்று நிலவிய அரசுகள் குறித்தும், கொங்கு பகுதியில் நிலவிய கல்வணிகம், புத்தமதமும் சைவ மதமும் எப்படி வணிகத்திற்காக பயன்படுத்த பட்டன, கலிங்க போருக்கு பின் அசோகர் ஏன் போர் புரியவில்லை, பழங்குடிகளாக பரவிவாழ்ந்து வந்த மக்களை அன்று உருவாகி வந்த அரசுகள் எப்படி மதங்கள் மூலம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன இப்படியாக அன்று நிலவிய சமூகத்தை ஏராளமான உரையாடல்கள் மூலம் அவர்களின் கதாப்பாத்திரத்திற்கே உரித்தான பாணியில் அறியமுடிகிறது.

அதோடு நில்லாமல் அன்று இருந்த கல் வணிகம், இன்று எப்படி உள்ளது. தாராளவயமாக்கலுக்கு பின் இந்த வணிகத்தின் நிலை என்னவாயிற்று? என்பதையும் மறைக்கவில்லை. இந்த கல்லை பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபடும் குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநில தொழிலாளர்களின் நிலைகுறித்தும் பதியவைப்பதில் தவறவில்லை.

ஒரு அரசாங்கம் மக்கள் விரோத செயலில் ஈடுபடும் முன் அது எப்படி அந்த பகுதியில் வாழும் கம்யூனிஸ்டுகள் மீதும், ஜனநாயகவாதிகள் மீதும் அடக்குமுறையை ஏவும் என்பதை கொடுங்கலூர் கண்ணகி கோவிலுக்கு செல்லும் பயணத்தில் நமக்குள் பதியவைக்கிறது.

முடிவில் கண்ணகி வரலாற்றைத் தேடிப் சென்ற முல்லைக்கு கண்ணகி மீது பூசப்பட்டிருந்த வரலாற்றுப் புனித பிம்பத்தைக் கட்டுடைக்கிறது மிளிர்கல். முல்லைக்கு மட்டும் அல்ல எனக்கும்தான்.

http://maattru.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0…/

ஏழரைப்பங்காளி வகையறா

21766853_2083965584962304_2588409778387558170_n

கிட்டதட்ட நான்கு தலைமுறையை வாசித்துவிட்ட ஓர் அனுபவம். உண்மை அனுபவங்களை கதையாடலாய் இந்த நாவலை எழுதியுள்ளார்.

* இந்த நாவலாசிரியருக்கும் இதுதான் முதல் நாவல்.

* 5வருட வாசிப்பு அனுபவத்தில் இதுதான் எனக்கும் முதல் நாவல்.

* “தமிழ்-உருது முஸ்லீம்கள்” பற்றிய முதல் தமிழ் நாவல்.

ஏன் நாவலை வாசிக்க வேண்டும் என்று கேள்வியுடன் இருந்த நேரத்தில்தான் இந்த நாவல் அறிமுகமானது. வாசிக்க ஆரம்பித்த முதல்நாளிலிருந்து கடைசிபக்கம்வரை மதுரையின் இஸ்மாயில்புரத்து மக்களின் உண்மை முகங்களை எந்தத் திரையும் இல்லாமல் எனக்கு அறிமுகம் செய்தார் என்றே உணர்கிறேன். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக மட்டுமே இருப்பதில்லை; அதுபோல கெட்டவர்கள் என்றுமே கெட்டவர்களாகவே இருந்துவிட்டு போவதில்லை. வாய்ப்புகிடைக்கும் போதேல்லாம் தன்னை நம்பியவர்களை ஏமாற்றும் குத்தூஸ் முதலில் தாவூத்தை ஏமாற்றுகிறான். ஆனால் பின்நாட்களில், தாவூத் தன் குடும்பத்தை இழந்து நிற்கும் தருணத்தில் அவனது குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுகிறான். தாவூதிற்கு பரிச்சயமான அத்துனைபேரும் அவனுக்கு உதவுகிறார்கள். கூரைவேய்தவன் கூலி வேண்டாமென்கிறான். நாடாரம்மா உதவுகிறார். அந்த மனிதர்களுக்கு பலவீனங்கள் இருந்தும் அவர்கள் அனைவரும் பரஸ்பர அன்பாலும், மனித நேயத்தாலும் பின்னப்பட்டிருந்தார்கள்.

ஒரு ராஜகுமாரனுடன் வாழபோகிறோம் என்ற கனவுகளுடன் வந்த ஆபில்பீக்கு நிகழும் தொடர் சறுக்கல்களில்தான் அவள் வாழ்க்கை பயணிக்கிறது. 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தவள் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா நாம் வாழ்க்கையில் மேலெழும்ப என்று தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறாள். சொத்தை இழக்கிறாள், வீட்டை இழக்கிறாள், அடுத்தவேளை உணவுக்கு குழந்தைகளுடன் பிச்சை எடுக்கிறாள். வாழ மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டும்போது பாய் நெய்கிறாள். எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற நம்பிக்கை அவளை நகர்த்துகிறது. தாவூதின் இறப்பில் நாவலில் அவன் அறிமுகமாகும் இடத்திலிருந்து பயணித்து வந்த ஒரு மெளனத்தின் கோர சப்தம் வெளிப்படுகிறது.

வாழ்வதற்கான அத்தனை வாய்ப்புகள் அமையப்பெற்றும் வாழமறுத்த ஒரு சாதாரண மனிதனின் சோர்வு, அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்த அத்தனைபேரையும் எப்படி சிதைக்கிறது என்பதைத்தான் தாவூத்தின் வாழ்க்கை எனக்கு உணர்த்துகிறது.

தன் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை விற்றுவிட்டு அதைப் பார்க்காமல் கடந்துபோகத் துடிக்கும் தாவூதின் உள்ளக்குமுறலை என்னால் கேட்கமுடிந்தது. ஆம். நாங்கள் வாழ்ந்த வீட்டை இன்று நான் என் ஊருக்கு செல்லும்போதேல்லாம் கடந்துபோகும்போது எனக்குள் கேட்கும் அதே சத்தம் தான்.

நாவலை படி என்று சொன்ன தோழன் Karkee Udayanக்கும், இந்த நாவலை படிக்க பரிந்துரைத்த தோழர் Mohammed Sirajudeenக்கும், இஸ்மாயில்புரத்து வீதியில் எனக்கு அறிமுகமான நண்பர் சையத் உசேன் பாஷாவுக்கும்(Arshiya Syed Hussain Basha) நன்றி.