“பார்வை மாற்று திறனாளி”களுடன் ஒரு உரையாடல்

2019 அக்டோபர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஒரு வாசக அமைப்பின் நிகழ்ச்சிக்குச் கணியம் அறக்கட்டளை சார்பாக, சிறப்பு விருந்தினராக அழைக்கபட்டிருந்தேன். அழைப்பின்போது ஒரு தகவலும் சொல்லபட்டது, பங்கேற்பவர்கள் பார்வை மாற்று திறனாளிகள் என்று.

எப்படி பேசுவது, என்ன பேசுவது, வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று பல விதிகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு சென்றிருந்தேன். ஆனால் எல்லாம் வீண் என்பது நிகழ்சி நடக்கும் இடத்தை அடைந்ததும் தெரிந்து கொண்டேன். எதுவும் அசாதாரணமாக எனக்குப் படவில்லை. எல்லா நிகச்சிகளைப்போலவே அந்த நிகழ்ச்சியும் பார்வை மாற்று திறனாளிகளால் ஏற்பாடு செய்யபட்டுக்கொண்டிருந்தது.

ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்ட நாள் அது. விவாதம் 2மணிநேரம் நீண்டது. இன்னும் விவாதித்து இருக்கலாம். ஆனால் அலுவலக பணிச்சுமை முடித்துவிட்டு செல்லவேண்டியதாயிற்று.

அன்றைய தினம் தான் தெரிந்து கொண்டேன், இதுவரைக்கும் பார்வைமாற்று திறனாளிகளுக்கென்று OCR செய்ய இலவச செயலிகள் இல்லை. அதிகபட்சமாக 5000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். சில இலவச செயலிகள் இருந்தும், அவை ஒரு குறிப்பிட்ட அளவே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பதும் தெரியவந்தது. இதற்கான ஒரு மாற்றாகப் புத்தகங்கள் குரல் வடிவில் கிடைக்கும். இதைத்தவிர இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு ஏற்படும் செய்யபடவும் இல்லை என்பதை அவர்கள் தெரிவித்தனர்.

IMG_20191005_115520

3வருடங்களுக்கு முன்னர் ஒரு பார்வை மாற்று திறனாளி தோழர் ஒருவர் #FreeTamilEbooks செயலிகுறித்து என்னுடன் பேசுகையில், அவர்களுடைய தேவைகள்குறித்து சொன்னார். தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் சேவைகளின் தரம் குறித்தும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சென்று அறிந்து கொண்டேன். அதுவரை எனது செயலிகள் எதுவும், குறைந்தபட்சம் பார்வை மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கூட நான் உருவாக்கவில்லை.

அன்றிலிருந்து என்னைத் துரத்தும் ஒரு கேள்வியாகவும் அது மாறியது. விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் FreeTamilEbooks செயலி வெளியீட்டு விழாவிலும் இதைப் பகிர்ந்தேன். விரைவில் OCR அல்லது TTS சார்ந்து ஒரு செயலியை உருவாக்குவோம் என்று. விடை தேடி அலைந்து போது ஒரு மைல்கல்…

#Tesseract என்ற திறந்த மூல எழுத்துணரி எஞ்சின் மூலம், தமிழ் எழுத்துக்களை OCR செய்ய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஒரு வழி கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையடையவில்லை. Tesseract-ஐ பயிற்றுவிக்க ஏராளமான Dataset தேவைபடுகிறது. அதாவது வேவ்வேறு எழுத்து வடிவங்கள்(Fonts) அல்லது கையாள் எழுதப்பட்ட எழுத்துக்களின் படங்கள் தேவையாகிறது.

இந்தத் தகவலைத் திரட்டினால், தரமான கூகிளுக்கு இணையான ஒரு OCR எஞ்சினை திறந்த மூல பயன்பாட்டில் கட்டமைக்க முடியும்… தற்பொழுது #கணியம் அறக்கட்டளையிலிருந்து, இந்தத் தகவலைத் திரட்டக் “அனைவரும் பங்களிக்கும்” வகையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். இது சாத்தியப்படும் பட்சத்தில், திறந்த மூல பயன்பாட்டில் தமிழுக்கு ஒரு எழுத்துணரி(OCR) கிடைக்கும்.

தமிழ்ச சிறுகதைக் கொண்டாட்டம் 158-ஆம் நிகழ்வு

#வாசகசாலை வழங்கும் #தமிழ்ச்சிறுகதைக்கொண்டாட்டம் 158-ஆம் நிகழ்வு… தனிமைக்கால சிறப்பு நிகழ்வாக முகநூல் நேரலையில் எழுத்தாளர் செல்வசாமியனின் “நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி” சிறுகதைகுறித்து பேசினேன்…
104262956_3059626547464233_8241279264274362976_o

இந்த வாரம் நடுத்தர மக்களின் வாழ்வை மையமாகக் கொண்ட மூன்று சிறுகதைகளை நிகழ்விற்கு தேர்வு செய்திருந்தனர். அம்மூன்று கதைகளின் சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.

காணொளி : https://cutt.ly/Mu7UGNm

சுட்டிகள்:
இமையத்தின் – ஆகாசத்தின் உத்தரவு : http://www.sirukathaigal.com/குடும்பம்/ஆகாசத்தின்-உத்தரவு/

செல்வசாமியனின் – நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி : http://www.vasagasalai.com/sirukathai-selvasamiyan/

அ.முத்துலிங்கத்தின் – தீர்வு : http://www.sirukathaigal.com/குடும்பம்/தீர்வு/

தினமொரு தமிழ்_சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத, பழக்கத்திலிருந்து மற(றை)ந்து சொற்களைத் தெரியப்படுத்தும் ஒரு முயற்சி.

Screenshot 2020-06-21 at 4.15.06 PM

பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள்:

  1. Python நிரலாக்க மொழி
  2. Back4App
  3. Heroku

விக்சனரி-யில் இருந்து சொற்களை அதன் பொருளுடன் எடுத்து, அதை Back4App-ல் தரவுத்தளத்தை(Database) உருவாக்கிச் சேகரித்துவைத்துள்ளேன்.

தினமும் மூன்று முறை(8 மணி நேர இடைவெளியில்) Heroku, இந்தப் பைத்தான் நிரலை இயக்கி, சேகரிக்கப்பட்ட சொற்களிலிருந்து ஒரு சொல்லை எடுத்து, டிவிட்டரில் பதிவிடும்.

தற்பொழுது, டிவிட்டரில் பதிவிடும் படியாகத்தான் எழுதியுள்ளேன். இன்னும் Mastodon தேவையெனில் Facebook-லும் பதிவிடும் படியாக இந்த நிரலை மேம்படுத்த வேண்டும்.

GitHub Source: https://github.com/KaniyamFoundation/DailyOneTamilWord

மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

இன்று காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல மென்பொருள் வல்லுநராக முடியும் என்ற கேள்வியுடன் தொடங்கியது அந்த உரையாடல்…

Mentoring Payilagam students on “How to be a successfull programmer”

ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையில் உள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்.

கற்பனைத்திறனே மனித இனத்தின் அசைக்கமுடியாத மாபெரும் சக்தி… பிரபஞ்சம் குறித்தும், உயிர்களின் தோற்றங்கள்பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னரே, மனித இனம் இதுகுறித்தான கற்பனைகளை உருவாக்கியிருந்தது. இந்தக் கற்பனை கதைகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வளர்சியடைந்துள்ளதையும் நம்மால் காண முடியும்.

இறக்கை கொண்டு பறவைபோலப் பறக்க நினைத்தான். வானத்தில் சொர்க உலகை உருவாக்கினான். இருட்டில் பாதாள உலகை படைத்துச் சாத்தானை உருவாக்கினான். மனித உருவம் கொண்ட கடவுளர்களையும் உருவாக்கி அவைகளை வழிபடவும் செய்தான். இதே கற்பனை வளம் ஒரு சிங்கத்துக்கு இருந்தால், அது தன் கடவுளைச் சிங்க வடிவில்தான் உருவாக்கியிருக்கும். இப்படி எல்லாவற்றையும் குறித்த கற்பனை கதைகள் மனிதனிடத்தில் உண்டு. அக்கற்பனை கதைகள் யாவும், தனது சந்ததியினருக்கு வழக்கப்பட்டு, அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுவதையும் உறுதி செய்தான்…

லாபம், கூடுதலான லாபம், இன்னும் கூடுதலான லாபம்… என்று லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இன்றைய அமைப்பு முறையில், அறிவையும் கற்பனைவளத்தையும் உருவாக்கித் தரவேண்டிய கல்வியானது சந்தையாகியுள்ளது கசப்பான உண்மை. அதன் காரணமாகவே, வலரிளம் பருவத்தில், முதுகில் மூட்டைச் சுமந்து நடக்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தை, சமூகத்தில் கெளரவமான ஒரு உத்தியோகத்தை அடையும் வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமென்று நிர்பந்திக்கடுகிறது.

அந்த வகையில் ஓடி வேலைகிடைக்காமல் அல்லது கிடைத்த வேலையில் தன்னிறைவை எட்டாமல் தவிக்கும் பலரை காணலாம்.

அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த ஒரு கை உதவினால், அந்த மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து நிறைவான மனிதனாக வாழ்ந்து முடிப்பான்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.”

அலரியும் நானும்…

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து, நான் அதிகமா முகர்ந்த வாசனை இந்த அலரிப் பூ தான். அப்பா பூ வியாபாரம் செஞ்சதாலே பெரும்பாலும் பல்லக்கு(பாடைய பல்லக்குன்னு சொல்லுவோம்) ஆர்டர் வரும்போது, இந்தப் பூ கண்டிப்பா வீட்டுக்கு வந்துடும். மற்ற பூக்களைக் காட்டிலும், இந்த பூவோட தண்டுப் பகுதி கொஞ்சம் கடினமா இருக்கும்.

அலரி(அரளி) செடி…

அத வச்சித்தான் நான் பூ கட்டவும் கத்துகிட்டேன். இந்த அலரிப் பூவோட வாசனையே தனிதான்… இப்போ நெனச்சாகூட அந்த வாசனைய நெனவுக்கு கொண்டுவர முடியும்.சில நேரத்துல நாளைக்கு பல்லக்குக்கு இன்னைக்கு நைட்டே அலரி கட்ட வேண்டிவரும். கைபட்டதும் பூத்துடும், அப்படி கட்டி முடிச்ச அலரிப்பூவ மொத்தமா தண்ணி தெளிச்சி ஒரு ஓராமா வச்சிடுவோம். அன்னைக்கு நைட் பூரா வீடே செம்ம வாசனையா இருக்கும். அதுல மொட்டா இருக்க பூவ எடுத்து, அதுமேல கைவச்சா அழகா பூக்கும்…

ஒடுக்குமுறைக்களுக்கு தொழில்நுட்பமும் விதி விலக்கல்ல…

🙍🏿‍♂️ vs 🙍‍♂️

நிறவெறிக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு பல நாடுகளில் இருந்து ஆதரவுகுரல்கள் எழுவதை கண்டுகொண்டிருக்கிறோம்.

வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெள்ளை நிற தோல் கொண்ட மக்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இந்த கதையும் நினைவுக்கு வருகிறது.

1999ல் இணையத்தில் இமோஜிக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்குப் பின்பான ஒரு நாளில்….

அவர்கள் இருவரும் நண்பர்கள். அவளுக்கு வெள்ளை தோல், அவனுக்குக் கருப்பு தோல். இருவரும் அன்றிருந்த மெஸேன்ஜரில் உரையடிக்கொண்டிருக்கும்போது, தற்செயலாக அவள் ஒரு இமோஜியை அனுப்ப அதன் மீது விவாதம் உருவானது. காரணம், அந்த இமோஜியின் நிறம். அன்றைய இமோஜிக்கள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவளும் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டிய சூழ்நிலை அவ்வளவுதான்.

அவனுடைய கேள்வி இதுவாக இருந்தது. ஏன் நீ எனக்கு அனுப்பும் இமோஜிக்கள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. இது நம் இருவருக்குமான நிற வேறுபாட்டைக் காட்டுவது போல உள்ளது என்றான்.

அதுவரை இது குறித்த சிந்தனையே அவளுக்கு எழுந்ததில்லை. இவ்வளவு நட்பாக பழகியும், அவனை இப்படி யோசிக்க வைத்ததுவிட்டோமே என்று எண்ணினாள்.

இப்படி பல கதைகள் உள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் இமோஜிக்கள் பலராலும் நிற வெறியை காட்டும் ஒரு ஆயுதமாக இணையத்தில் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது நாம் அறியாத ஒன்று.

இப்படியான உரையாடல்கள், கருப்பு நிற தோல் மக்கள், மஞ்சள் நிற இமோஜி பயன்படுத்ததும் போது, அவர்களை கேலி செய்யும் போக்கும் இருந்தது. அது ஆசியர்களின் நிறம் என்பது வரை நீண்டது…

அந்த நேரத்தில்தான் பலரும் ஒன்றிணைந்து, 2012ல் இதற்கு ஒரு முடிவு எழுதினர்.
ஆம், தோல் நிறம் குறித்த ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகளை கொண்டு உலக மக்களை 5 நிறங்களில் குறிக்கலாம் என்றும், இனி இமோஜிக்கள் 5 நிறங்களில் கட்டாயம் இருக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கபட்டு இன்று நாம் பயன்படுத்ததும் இமோஜிக்கள் மனித முகங்கள் 5 நிறங்களில் வந்தடைந்துள்ளன.

பல நிற இமோஜிக்கள் பயன்பாட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியில்தான்…

அந்த கோரிக்கையில் ஒரு வாசகம்…

“இணையத்தில் உலகின் எல்லா நிற மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இமோஜிக்கள் இருக்க வேண்டும்”…

ஒடுக்குமுறைக்களுக்கு தொழில்நுட்பமும் விதி விலக்கல்ல… இமோஜிக்களே சாட்சிகளாக நம் கண் முன்னே…..

🙍🏿‍♀️🙍🏾‍♀️🙍🏽‍♀️🙍🏼‍♀️🙍🏻‍♀️🙍‍♀️🙍🏿‍♂️🙍🏾‍♂️🙍🏽‍♂️🙍🏼‍♂️🙍🏻‍♂️🙍‍♂️

விக்கிமூலம் மெய்ப்புபார்க்கும் தொடர் நிகழ்வு – 2020

விக்கிமூலம் – இது ஒரு “பதிப்புரிமையில்லா” விக்கிநூலகத் திட்டமாகும். இதில் நா. வானமாமலை, பண்டிதர் க. அயோத்திதாசர், தொ. மு. சி. ரகுநாதன் உட்பட தமிழின் 91 ஆசிரியர்களின், 2217 நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மின்னூல் வடிவிலும், PDF, Doc வடிவிலும் கிடைக்கும். விக்கிபீடியா-வை போல, விக்கிமூலமும் பல்வேறு மொழிகளிலும் உள்ளது.

மே மாதம் 1ஆம் தேதி முதல், 10ஆம் தேதிவரை இந்திய மொழிகளுக்கான மெய்ப்புபார்க்கும்(Proofread) தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில் அசாமி, பெங்காலில், குஜராதி, தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளிலிருந்து, 193 பேர் பங்கெடுத்து அந்தந்த மொழிகளில் மெய்ப்புபணிகளில் ஈடுபட்டனர்.

Indic_Wikisource_Proofreadthon_2020_-_Participants.svg.png
பல்வேறு மொழிகளிலிருந்து பங்கேற்றவர்கள் குறித்த வரைபடம். Source: https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon/Progress#/media/File:Indic_Wikisource_Proofreadthon_2020_-_Participants.svg

10நாட்கள் நடைபெற்ற இந்த மெய்ப்புபார்க்கும் பணியின் இறுதியில் மொத்தம் 21,390 பக்கங்கள் மெய்ப்புபார்த்து முடிக்கப்பட்டது.

தமிழ் விக்கிமூலத்தில் 30பேர் பங்கெடுத்துக்கொண்டு 4994 பக்கங்களை மெய்ப்புபார்த்து முடித்தனர். இன்னும் 3,55,357 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளன.

இந்தத் தொடர்நிகழ்வில் நானும் பங்கெடுத்துகொண்டு, எஸ்.எம். கமால் அவர்களின் முஸ்லீம்களும் தமிழகமும், மார்க்சீம் கார்க்கியின் தாய் நாவலின் பல பக்கங்களையும் மெய்ப்பு பார்த்து உதவினேன். இதன் மூலம் இந்திய அளவில் 9ஆவது இடமும், தமிழக அளவில் 4ஆவது இடமும் பெற்றேன். இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 4பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshot 2020-05-18 at 7.42.28 PM
இந்திய அளவில் முதல் பத்து இடம் பிடித்தோர் பட்டியல்.

இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் 10 நாட்களில், இரண்டு புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

நன்றிகள்

விக்கிமூலத்தில் நான் தொடர்சியாகப் பங்களிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. டெலிகிராமில் “இந்திய மொழிகளுக்கான விக்கிமூலத்தில்” இந்தப் போட்டிகுறித்த சீனிவாசன் அவர்களின் பதிவுதான், இந்தப் போட்டியில் பங்கெடுக்க வைத்தது. போட்டி துவங்கிய நாளிலிருந்து முஸ்லீம்களும் தமிழகமும் புத்தகத்தை மெய்ப்புபார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். இதில் நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி தொடர்சியாக என்னைப் பங்களிக்க தூண்டியது தோழர். தகவல் உழவனும், தோழர். குரு லெனின்னும் ஆவர்.

படித்ததில்.. பிடித்தது… ‘சாந்தி (எ) நஜமுன்னிஷா’

மாற்று இணையதளத்தில் வெளியான என்னுடைய புத்தக அறிமுகம்.

தான் தொழுத அந்த அல்லாவோ… தன் கணவர் வணங்கிய முப்பத்து முக்கோடி தேவர்களோ இன்று இயேசு வடிவில் வந்து தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உதவுவதாகத் தாஜ் நினைத்துக்கொண்டாள்.

“இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூன்” என்று துவங்கும் இந்நாவல் மதத்தின் பெயராலும், சாதியாலும், கடவுளின் துணைகொண்டு இந்த ஆண்களால் இழைக்கப்படும் அநீதிகளைத் ஒரு பெண் தன் வாழ்வில் கற்ற அனுபவம் என்ற பேராயுதத்தின் துணைகொண்டு வெட்டுகின்றது. உருது பேசும் இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கையை படமாக்கிக் காட்டும் இந்த நாவல் திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு துவங்குகிறது.

“கொழந்தைங்களுக்கு தாய், தகப்பன் படுற கஷ்டத்த சொல்லி வளக்கனும்” என்று ஒரு சாராரும்,

“என் கொழந்தைங்க கஷ்டம் தெரியாம வளத்துட்டேன்” என்று ஒரு சாராரும் பேசுவதை கேட்டிருப்போம். இதில் நான் சந்தித்த ஆயிஷா முதல் ரகம். தக்க சமயம் கிட்டும் போதெல்லாம் தன் குழந்தைகளுக்கு, தன் வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லிவிடுவாள். இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தும், எந்நிலையிலும் தன் குழந்தைகளின் விருப்பு/வெறுப்புகளில் தலையிடாத எதார்த்தவாதி. திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதையின் நாயகியும் இவளே.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துவைக்கப்பட்டவள். தன் கணவன் இறந்த செய்தியைக் கேட்டு எந்த விதமான சலனமும் இல்லாமல் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தாள் என்று வாசிக்கும்போது, இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண்ணைக் கொண்டுவந்து என்முன்னே ஆயிஷா என்ற பெயர் கொண்டு நிறுத்துகிறது.

“நாளபின்ன ஜமாத்துல புருசன் செத்ததுக்கு கூட ஏண்டி வரலேன்னு கேட்டா என்ன பன்றது?” என்ற கேள்விக்கு “என் புருஷன் குடிச்சிட்டு வந்து மண்டைய ஒடச்சப்ப கூட ஆம்பளைன்னா அப்படிதாண்டி இருப்பான் அனுசரிச்சு போன்னு சொன்னவங்க தானே இந்த ஜாமாத்தானுங்க?… எவ்ளோ காலந்தான் ஊரு ஒலகத்துக்கு பயந்து காலந்தள்ளறது. நமக்குன்னு ஒரு நாயம் வானா…?” என்று சொல்லும்போது, தன் மதப்பற்றையும் அதே வேளையில் தன் அனுபவத்தையும் கொண்டு தனக்கான பாதையை வகுப்பதில் வியப்படைய வைக்கிறாள்.

“ஹும்… ஏதோ ஆபத்துக்குப் பாவமில்லேன்னு அன்னக்கி சோறு போட்டே… அவனும் நன்றியோட நெனச்சிப் பாக்குறான். அதுக்கு? நீங்கப் பொழங்கற சொம்புலயேவா அவங்களுக்கும் கொடுக்குறது? சரியில்ல பூமா… தரித்திரம் புடிச்சிக்கும். அடுத்த மொற அவெ வந்தா தனியா டப்பா எதுலயாவது கொடு. திண்ணயில எல்லாம் ஒக்கார வக்காதே.” என்று தான் சார்ந்த மதத்தின் (வர்ணாசிரம)தர்மத்தை ஆயிஷாவிடத்தே திணிக்கும்போது… “ஆமா… தீட்டு வந்து ஒட்டிக்குமாக்கும். ஒம் புள்ளங்க கூடத்தான் அவெங் கையால சீவன பனங்காய உறிஞ்சி உறிஞ்சி தின்னாங்க. அவங்க கொடலே தீட்டாயிடுச்சே… என்னா பன்னுவே? வவுத்துல கீற கொடல உருவி வண்ணானுக்கா போடுவே… என்று சக மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுகொள்ளுங்கள் என்று உரையாடலை முடிக்கும் வேளையில் தனது தரப்பு வாதத்திற்கு பராசக்தி திரைப்படத்தின் ஒரு காட்சியைத் துணைக்கு அழைக்கும்விதம், எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் அடிவாங்கும்போது துடித்த பாமர ரசிகர்களை நினைவூட்டிவிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு திருமண புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதில் மணப்பெண் இஸ்லாமியர் என்றும் மணமகன் இந்து என்றும் கூறி மதம் மாறாமல் நடக்கும் இந்தத் திருமணம் விபச்சாரம் என்று சில இஸ்லாமிய அடிப்படைவாத ஜமாத்துக்களாலும், சில இஸ்லாமிய அடிப்படிவாதிகளாலும் பகிரப்பட்டது. உண்மையில் அந்தக் காதல் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றதே.

தன் மகள் காதலனை மணக்க மதம் ஒரு தடையாக வரும்போது தன் இயலாமையை உணர்ந்து எந்தவித தயக்கமுமின்றி ஆயிஷா முன்வைக்கும் வாதம், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் அவர்தம் அடிப்படைவாத கருத்துகளுக்கும் கொடுக்கும் சவுக்கடி.

“அல்லா எங்கேயு இருக்கறவெ… என் கூரெ வூட்டுல இருக்கமாட்டானா? பத்துமாசம் சொமந்து பெத்தவளவுட ஜமாத்தாரு ஆரும் பெரியவங்க இல்ல. எம் முன்னாடி எம் பொண்ணெ நல்லா பாத்துக்குவேன்னு வாக்கு குடுத்துட்டு… எம் பொண்ணெ கூட்டிப் போயி குடும்பந் நடத்துங்க…”

சாந்திக்கும், தாத்ரேயருக்கும்(கூர்க்கா) பிறந்த குழந்தையான சதா என்கிற சதாசிவம் நடத்தும் உரையாடல்கள் ஒருபக்கம் நகைப்பூட்டுவதாக இருந்தாலும், அவையாவும் இன்று விவாதத்துக்கு உட்பட்டே தீரவேண்டியதாக இருக்கிறது.

தான் இந்துவா? முஸ்லீமா?. சதா என்கிற பெயர்தான் பிரச்சணையா? பெயரை முஸ்லீம் பெயராக மாற்றிகொண்டால் எல்லாரும் தன்னை முஸல்மானாகா(இஸ்லாமியனாக) ஏற்றுக்கொள்வார்களா? தன் பாட்டி ஆயிஷாவுடன் நடத்தும் உரையாடலுக்கும் பின் தான் இப்லீஷ்(சாத்தான்/லூஸிபர்) கட்சியினனாக இருப்பதுதான் சரியானது என்று உணரும் தருணம், மனிதன் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நியாயம் புகட்ட “சாத்தான்” மீது பழிசுமத்திவிட்டு செல்லும் போக்கை நகைப்புக்குள்ளாக்குகிறது.

கட்டியிருக்கற பொடவையில் பாதிய கழிச்சி கொடுத்துட்டு மீதிய தாவனியா கட்டியாற மனசு யாருக்கு வரும். ஓ அம்மாவுக்கு அந்த மனசு இருந்துச்சு….

அவெ மார்க்கத்த வுட்டு வெளியே போனவத்தான், “அல்லா என்னய என்னா சீரா வச்சிருக்கான்…? நா எதுக்கு நமாஸு படிக்கனும்” ன்னு கேப்பா…

“ஏ ஒழைப்புல நான் முன்னேறுனேன். என்னால முடிஞ்சத நா நாலு பேருக்கு செய்யறேன்.” அப்படீன்னு சொல்லுவா… அவ தொழுது, துவா கேட்டு நாம் பாத்தது இல்லே…

எங்கள் காப்பாத்த குடும்பத்துக்காக ஒழச்சே உயிர வுட்டா… அவ அல்ப ஆயுசுல போய் சேந்தது என்னவோ மெய்தான். ஆனா இன்னிக்கி அவெ குடும்பமே அவெ புருசன் வூட்டுல நிம்மதியா’ காலங் கழிக்கறோம்.

அவெ தங்கச்சிங்களும் தம்பி காதரும் ஒன்ன தாயில்லா கவல தெரியாம பாத்துக் கறாங்க. இதெ விட சொர்க்கம் னு தனியா எங்க இருக்கு. இப்ப அவெ சொர்க்கத்துல தான்டா இருக்கா… சொர்க்க நரகம் எல்லாம் நம்ம நடந்துகற மொறயிலத்தான் கெடைக்கும்.

இப்படி சில மேற்கோள்களிட்டோ அல்லது ஒரு சில வரிகளில் சுருங்க சொல்லிவிட்டோ கடந்துவிடுமுடியாது. நாவலில் ஆயிஷாவும்-சதாவும் முன்வைக்கும் வாதங்கள் அத்தனையும் மதம், தூய்மைவாதம் பேசும் இஸ்லாமியர்களைக் குடைந்தெடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

உருது முஸ்லீம்களின் மொழியையும், நடுநாட்டின் வட்டார மொழியையும் கலந்துகட்டி அமைக்கப்படுள்ள இந்த நாவலில் பெரும்பாலான உரையாடல்கள் யாவும் ஜாமாத்துகள் என்று பேரில் கட்டபஞ்சாயத்து செய்யும் ஆணாதிக்கவாதிகளையே கூண்டிலிருத்துகிறது.

தனக்கென அங்கீகாரம், சுற்றத்தாரிடம் மரியாதை, சமுதாயத்தில் மதிப்பு இந்தப் போதைதான் மக்களைச் சாதி மதம் என்ற புதை குழிக்குள் சிக்க வைக்கிறது. உண்மையில் சாதி மத அடிப்படையிலான சமுதாயக் கட்டமைப்புகள் மனிதனை மனிதானக வாழவிடாது, ஆக்டோபஸின் கால்களைப் போல  வளைந்து நெளிந்து இறுக்கிப்பிடித்துக் கொண்டே இருக்கும். ஒரு தலைமுறை கலப்பு திருமணம் புரிந்து போராடி வெளிவந்தாலும், அவர்களின் அடுத்த தலைமுறைகள் மீண்டும் அந்த மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு சாதி, மதம், கடவுள், சடங்குகள் போன்ற எந்தக் கட்டுகளுக்குள்ளும் சிக்காமல் சுதந்திரப் பறவையாக வாழ்ந்து காட்டிய ஆயிஷாவும் அவள் மூத்த மகள் சாந்தி (எ) நஜமுன்னிசாவுமே சான்று…

பிறரின் நம்பிக்கைகள் எதுவாகினும் சரி… لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ (லகும் தீனுக்கும் வலிய த்தீன் (குர்-ஆன் 109:6)) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்பதுதான் ஆயிஷாவின் மூலமாக நமக்குச் சொல்லப்படும் செய்தி.

சந்தியா பதிப்பகம் வெளியீட்டில் தா. சக்தி பகதூர் அவர்களின் முதல் நாவலாக உருகொண்டுள்ளது “சாந்தி என்கிற நஜமுன்னிஷா”.

 

படித்ததில்.. பிடித்தது… “திலக்கியா”

ஆயிரம் வேரைக் கொண்டவன்…
அரை வைத்தியன் ஆவான்…

இது நமக்கெல்லாம் மிகவும் பழக்கபட்ட பழமொழி. இது வைத்தியனுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொருந்தும். வேரையும், வைத்தியனையும் மாற்றிகொண்டால் போதும்.
நான் என்னுடைய மாணவர்களுக்குச் சொல்லுவது… ஆயிரம்லைன் கோடு படிச்சா, அரைகுறை டெவலப்பர் ஆகலாம்.


எஸ். பிரவீன்குமார் எழுத்தில் வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ள(டிசம்பர் 2019-ல் முதல் பதிப்பு) சிறுகதை தொகுப்பு தான் “திலக்கியா”. இணையத்திலும், அச்சிலும் வெளிவந்த ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பே நூல் வடிவம் பெற்றுள்ளது.

இங்க் பேனா, ஆட்டக்காரங்கோ இந்த இரண்டு சிறுகதைகளும் அவை இணையத்தில் வெளிவந்த போதே வாசித்திருந்தேன். ஆனால், முதல்முறையாக வாசிக்கும்போது அறிமுகமாவதை போன்றே கதை மாந்தர்கள் செலஸ்டினா, ஐசக், ஊள என்கிர தரணி, தரணியின் குடும்பம் அறிமுகமானார்கள். இன்னும் எத்துனை நாட்கள் கழித்து மீண்டும் வாசித்தாலும் இது மாறாது என்பதே என் எண்ணம். காரணம், எழுத முடியாத இங்க் பேனாவை கொண்டு எழுதமுடியாமல் போன காதல் மற்றும் நகர வாழ்க்கையில் குடும்பங்கள் இழந்துள்ள சின்ன சின்ன விளையாட்டுகளை நினைவூட்டும் ஆட்டக்காரங்கோ…

டைட்டானிக் படத்தில் ஒரு காட்சி. நாயகியின் ஆடைகளற்ற உடலை வரையும் நாயகன் எந்த ஒரு சல்லாபத்திற்கும் இடமளிக்காமல் ஓவியத்தை வரைந்துமுடிப்பான். கமலஹாசன் 50-ல் நாயகிகளுக்கு முத்தமிடுவது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் “நீங்க ஒரு ச்சேர்க்கு(இருக்கைக்கு) முத்தம் கொடுக்கச் சொன்னாலும் அதே உணர்வோட கொடுப்பேன்” என்பார். ஒரு கலைஞனின் உலகம் என்பது எப்போதுமே வேறுதான். அவனுடைய பார்வையும் கூட. சிறுவயதில் ஒரு இரவில் செகாவ் பனியில் நனைந்துகொண்டிருக்கும் ஒரு குதிரையைப் பார்த்து, அதற்காகப் பரிதாபப்பட்டு அந்தக் குதிரையுடனே கொட்டும் பனியில் இரவு முழுவதும் நிற்கிறார். தெருவில் இவரும் குதிரை மட்டுமே இருக்கின்றனர். கடைசி வரை குதிரை அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. துயரமடைந்த செகாவ் எழுதுகிறார் “கைவிடபடுதலும், நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது” என்று. இப்படி புரிந்துகொள்ளப்படாத ஒரு கலைஞனின் உணர்வுகளைப் பதிவு செய்யும் உடல் என்னும் சிறுகதை.

“தெரில செழியா, ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் உடல எந்தச் சாமிக்கும் கொடுக்க முடியாது?” என்ற பதிலில் ஒளிந்திருக்கும் பவரிதம் என்னும் சிறுகதை.

“ஏதேதோ விஷ்யங்களைப் பேசியிருக்கிறோம். ஆனால் காதலைப் பற்றி இதுநாள்வரையில் நாங்கள் பேசியதே இல்லை” என்று அற்புதமான காதலுக்கு முற்றுபுள்ளி வைக்கும் திலக்கியா. (முதல் பாதி கதையை 6முறைக்கு மேல் வாசித்த பிறகே இந்தச் சிறுகதையின் சூட்சமம் புரிந்தது).


இவையாவும் இத்தொகுப்பில் நான் படித்துமுடித்து அடுத்த கதைக்குச் செல்ல ஒரு நீண்ட இடைவெளி எடுத்துகொண்ட சிறுகதைகள். அப்படியான ஒரு அனுபவம்.

பல இடங்களில் குழப்பத்தையும், நான் சரியாகத்தான் வாசிக்கின்றேனா? என்று எனக்கே சந்தேகத்தையும் வரவைத்து சில கதைகளை மீண்டும் வாசிக்க வைத்துவிட்டார் ஆசிரியர். ஆம். நான்லீனியர் முறையில் சொல்லப்படும் கதைகளும், அதை ஒற்றை புள்ளியில் கொண்டுவந்து முடிக்கும் நேர்த்தியும் என்னவென்று சொல்லுவது. முன்னமே சொன்னது போல…

ஆயிரம் வேரைக் கொண்டவன்…
அரை வைத்தியன் ஆவான்…

நல்ல வாசகனே… சிறந்த எழுத்தாளன்…

குறிப்பு : புத்தகத்தில் “கதைவெளி” என்ற முன்னுரையை கடைசியாக வாசிக்கவும்.

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது.

ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன் உலகளவில் பல தன்னார்வலர்களின் உதவியுடன் இயங்கிவருகிறது.

இப்படியான பல கட்டற்ற/திறந்தமூல மென்பொருட்களுக்கு மொழியாக்கம் என்பது ஒரு முக்கிய படிக்கல்லாகும். அதாவது, வேற்று மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருட்களை நமது மொழிக்கு மொழிபெயர்த்து அதைப் பலரும் பயன்படுத்தும் வகையில் கொண்டுசெல்வது முக்கிய நோக்கமாகும்.

அப்படியாக இன்று நாம் மொசில்லாவின் தமிழ் மொழியாக்கம் குறித்து இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.

சுட்டிகள்:
1. https://pontoon.mozilla.org/
2. https://mozillians.org/
3. https://groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join
4. https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta

காணொளி: